பெண் தலைமைத்துவமும் அரசியல் பங்கேற்பும்
இன்றைய நவீன உலகில் பெண்களின் முன்னேற்றம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியோடு நின்றுவிடக் கூடாது. ஒரு சமூகத்தின் உண்மையான மாற்றத்திற்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அடக்குமுறைகளை ஒழிப்பதற்கும் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் அரசியல் பங்கேற்பு மிக அவசியமான ஒன்றாகும். குடும்பத்தை மிகச்சிறப்பாக நிர்வகிக்கும் ஆளுமை கொண்ட பெண்களால், நாட்டை நிர்வகிக்கும் உயரிய இடத்திற்கும் வர முடியும்.
தமிழ் வியூகம் ஆசிரியர் பீடம்அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஏன் அவசியம்?
டிஜிட்டல் யுகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றுக்குத் தீர்வு காணப் பெண்களின் குரல் அதிகார மையங்களில் ஒலிக்க வேண்டும்:
பாதுகாப்பு: ஒரு பெண்ணின் வலியையும், அவதிப்பாடுகளையும் இன்னொரு பெண்ணால் மட்டுமே ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் துணிச்சலாகக் குரல் கொடுத்து நீதியைப் பெற்றுத்தர பெண் தலைவர்கள் அவசியம்.
சமத்துவத்தை உறுதிப்படுத்தல்: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றில் பாலின சமத்துவத்தை (Gender Equality) நிலைநாட்ட உள்ளூராட்சி மன்றங்கள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் பங்களிப்பு தேவை.
பங்கேற்பதற்கான தடைகளும் தீர்வுகளும்
கலாச்சார நெறிமுறைகள் மற்றும் பொருளாதாரச் சுமை காரணமாகப் பல திறமையான பெண்கள் அரசியலை விட்டு ஒதுங்கியுள்ளனர். இந்தத் தடைகளை உடைக்க:
கற்றல்: அரசியல் தந்திரோபாயங்கள் மற்றும் சட்டக் கட்டமைப்புகள் குறித்துத் தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
தொடர்பு வலைப்பின்னல்: உங்கள் பகுதிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆரோக்கியமான தொடர்புகளை ஏற்படுத்தி, உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துங்கள்.
வாசிப்பு: உலக அளவில் வெற்றி பெற்ற பெண் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். இணையதள விவாதங்களில் பங்கேற்று உங்கள் அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தலைமைத்துவத்தின் தாக்கம் மற்றும் சவால்கள்
தலைமைத்துவம் என்று வந்துவிட்டால் ஆண், பெண் என்ற பேதம் இருக்கக் கூடாது. ஆனால், காலம் காலமாகப் பெண்கள் எடுக்கும் முடிவுகள் மீது ஒருவித அவநம்பிக்கை சமூகத்தில் நிலவுகிறது.
சூழ்ச்சிகளை முறியடித்தல்: அரசியல் களத்தில் பெண்களை வீழ்த்த எடுக்கப்படும் நுணுக்கமான சூழ்ச்சிகளைத் தற்காத்துக் கொள்ளும் மன தைரியத்தைப் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கூட்டு முயற்சி: பெண் தலைவர்கள் எப்போதும் தங்களுக்குப் பின்னால் ஒரு வலிமையான பெண்கள் அணியை (Women's Wing) வைத்திருப்பது அவசியம். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும்போது சமூகம் உங்களை ஒரு வலிமையான தலைவராக ஏற்கும்.
வெற்றிக்கான தாரக மந்திரம்
சுமார் 90 சதவீதப் பெண்கள் குடும்பச் சுமை காரணமாகத் தங்கள் இளமைக்காலக் கனவுகளை மறந்துவிடுகின்றனர். எஞ்சிய 10 சதவீதத்தில் இருந்துதான் ஆளுமைகள் உருவாகிறார்கள்.
ஆளுமைப் பண்புகள்: பொறுமை, தியாகம், விட்டுக்கொடுப்பு மற்றும் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய சவாலையும் முறியடிக்கலாம்.
ஆதரவு: குடும்பம் மற்றும் கணவனின் ஒத்துழைப்பு கிடைத்தால் இலக்கை அடைவது எளிது.
திறன்கள்: மொழிப்புலமை, சமூக ஊடக அறிவு மற்றும் ஊடகவியலாளர்களுடனான சுமூகமான உறவு உங்களை அரசியலில் நிலைத்து நிற்கச் செய்யும்.
பெண்களின் தலைமைத்துவம் என்பது ஒரு நீதிக்கான போராட்டம் மட்டுமல்ல, அது நிலையான சமூக வளர்ச்சிக்கான அடிப்படை. யாரோ ஒருவர் உங்களைத் தட்டிக்கொடுத்து அடையாளம் காட்டுவார் என்று காத்திருக்காமல், ஒரு கூட்டத்தில் உங்களது கைகளை உயர்த்தி "நானும் ஒரு தலைவிதான்" என்று முன்னே வாருங்கள். உங்களுக்காக ஒரு மாபெரும் இடம் காத்துக் கிடக்கிறது
நன்றி- ஜெகன் ஊடகவியலாளர்
@tamilviyugam

COMMENTS